டிசம்பர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: டிசம்பர் 2016

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆவிக்குரிய புதுப்பிப்பு

சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.

திருப்தியை பற்றிக்கொள்ளுதல்

ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).

இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.

சகோதரன் சவுல்

"ஆண்டவரே, தயவுசெய்து என்னை அங்குத் தவிர வேறு எங்கும் அனுப்புங்கள்." சுழற்சிமுறையில் பயிலிடம் மாற்றவேண்டியிருந்த மாணவனாக ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு இளைஞனாக அதுவே என் ஜெபம். எங்குச் செல்வேன் என்று நான் அறியேன், ஆனால் எங்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் அறிவேன். நான் அந்த நாட்டின் மொழியைப் பேசவில்லை, அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளால் என் மனம் நிறைந்திருந்தது. எனவே என்னை வேறு இடத்திற்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்டேன்.

ஆனால் தேவன் தம் எல்லையற்ற ஞானத்தால் நான் செல்ல விரும்பாத இடத்திற்குத் துல்லியமாக என்னை அனுப்பினார். அவர் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்ணில் எனக்கு அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள்.  என் திருமணத்திற்கு என் சிறந்த நண்பர் ஸ்டீபன் அங்கே வந்தார். அவருக்கும் திருமணமாகிவிட்டது.

தேவன் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்! அதுபோன்ற ஒரு மாற்றம் இரண்டு வார்த்தைகளால் விளக்கப்படுகிறது: "சகோதரனாகிய சவுலே" (அப்போஸ்தலர் 9:17).

அந்த வார்த்தைகள் அனனியாவிடமிருந்து வந்தவை, சவுலின் மனமாற்றத்திற்குப் பிறகு உடனடியாக அவரது பார்வையைக் குணப்படுத்த அழைக்கப்பட்டவர் (வ. 10-12). சவுலின் கடந்த காலத்தின் வன்முறை காரணமாக அனனியா முதலில் எதிர்த்தார், “உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.” (வச. 13) என்று ஜெபித்தார்.

ஆனால் அனனியா கீழ்ப்படிந்து சென்றார். அவர் மனம் மாறியதால், அனனியா விசுவாசத்தில் ஒரு புதிய சகோதரனைப் பெற்றார், சவுல் பவுலானார், மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தி வல்லமையுடன் பரவியது. உண்மையான மாற்றம் அவரால் எப்போதும் சாத்தியம்!